வியாழன், 17 மே, 2012

இலங்கை விவகாரம்..


மே பதினேழு முடிவல்ல தொடக்கமும் அல்ல -தமிழ் சோறு முக ஏட்டுக்குழுமம்

எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழ் பேசும் சொந்தங்களே! உங்கள் அனைவருக்கும் எமது பணிவான வணக்கங்கள்! இன்றைய நாளில் எமது தேசியத்தின் விடிவுக்காகவும் எமது சுபீட்ச வாழ்வுக்காகவும் எமது உரிமைகளுக்காகவும் போராடி தமது இன்னுயிரை எமக்காக ஈந்த ஒப்பற்ற வீரன் ஒருவனது நினைவு நாளாகவே இருக்கும்! ஒரு வருடத்தின் அனைத்து நாட்களுமே அவர்களில் சிலரோ பலரோ தமது இன்னுயிர்களை எமக்காக/ எமது மொழிக்காக/எமது மண்ணுக்காக ஈந்துள்ளனர்! போராட்டத்தின் தளங்கள் வேண்டுமானால் மாறியிருக்கலாம் இந்திய தேசிய விடுதலைப்போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழீழ விடுதலைப் போராட்டம், பாசிசப்படுகொலைகள் சாதியப் படுகொலைகள் என நீண்டு விரிந்த பரப்பெல்லைகளையும் வரலாறுகளையும் கொண்டவை! நீங்கள் இந்த அறிக்கையை படித்துக்கொண்டிருக்கும் இதே நாளில் அன்று எமது விடுதலைக்காகவும் எமது தேசிய விடிவுக்காகவும் யாரோ ஒரு உயிர்க்கொடையாளி எமக்காக உயிர் நீத்திருப்பான்! யாரோ ஒரு தியாகியினது குரல்வளை நசுக்கப்பட்டிருக்கும்! 

இந்த அவலத்தில் இருந்து விடுபடமுடியாமல் அடிமைப் பட்டுக் கிடப்பதே அன்றிலிருந்து இன்றுவரை எமது சமூகத்திற்குப் பெரும் சாபக்கேடாக அமைந்துவிட்டது! அன்னியர்களால் எமது குரல்வளை நெரிபட்டதை விட எமது உறவுகளாலும் எம்மால் தெரிவுசெய்யப்பட்ட ஆட்சியாளர்களாலும் எமது கழுத்தும் எமது இனத்தின் ஆன்மாவினது குரல் வளையும் நெரிபட்டதே அதிகம். ! நாம் ஒருதடவை இதைப்புரிந்துகொண்டு அடுத்தமுறை அப்போது இவற்றுக்கெதிராகக் குரல்கொடுத்தவரை ஆட்சிக்கட்டிலில் ஏற்றி அழகுபார்க்கிறோம்! அதுவரை நல்லவர்களாகவும், எமது உறவினர்களாகவும், எமது காவலர்களாகவும் நடித்துக்கொண்டிருந்த எமது அறிக்கைகளால் சவடால் விட்டுக்கொண்டிருந்த எமது நம்பிக்கையாளர்கள் தமது கைவரிசையை காட்ட உரிய களமாக இந்த ஆட்சிக்காலத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர்!
அரசியல் என்றால் என்ன? ஜனநாயகம் என்றால் என்ன? ஆட்சி அதிகார எல்லைகள் என்றால் என்ன என்பது முதல் வெளியுறவுக்கொள்கை, அந்நியத் தலையீடு! ,வர்த்தக உடன்படிக்கை போன்ற விடயங்கள் வரை எம்மில் பலருக்குத் தெரிந்திருப்பதில்லை! அவற்றை நாம் தெரிந்திருப்பதை ஆட்சியாளர்கள் விரும்புவதும் இல்லை என்பதே உண்மை! கேள்விகள் அதிகரித்தால் கொள்ளை அடிப்பது கடினம் என்பதே அவர்களின் ஒரே தாரக மந்திரம்! இருந்தாலும் கேள்விகள் எழாமல் இருப்பதுமில்லை, கொள்ளைகள் நடைபெறாமல் இருப்பதுமில்லை! காரணம் கேள்வி கேட்பவன் கேள்விகளைத்தேடுவதில்லை ஆனால் கொள்ளைக்காரன் அதற்க்கான வழிகளைத்தேடிக்கொண்டே இருப்பான்! இங்கு கேள்வி என்பது ஆட்சியாளர்கள் மீது தொடுக்கப்படும் கேள்விகளையும் கொள்ளை என்பது ஆளூம் வர்க்கத்தினரால் சுரண்டப்பட்டு குவிக்கப்படும் மக்கள் பணம் உள்ளிட்ட உழைப்பையும் குறிக்கிறது! இவைபற்றி உதாரணங்கள் அவசியமில்லை என கருதுகிறோம் தொடர்ந்து வாசியுங்கள் இலகுவாக புரியும்!இன்று பார்ப்பனிய எதிர்ப்பு/ காங்கிரஸ் ஏகாதிபத்திய எதிர்ப்பு/ எனத்தோன்றிய திராவிடக்கட்சி பின்னர் அதன் நடவடிக்கைகளால் அதிலிருந்து பிரிந்த ஏனைய திராவிட கட்சிகள் மேற்குலக முதாளித்துவ சுரண்டலுக்கு எதிராக தோன்றிய சமவுடமை, பொதுவுடைமை சித்தாந்தங்களை உள்வாங்கிய கட்சிகள், தமிழ்த்தேசியம் என்ற அவசியமான கருத்துருவை உள்வாங்கி புதிதாக நடைபோட ஆரம்பித்துள்ள தமிழுனர்வுக்கட்சிகள் என்பன எவ்வளவு தூரம் தமது உண்மையான முகத்தோடு நடை போடுகின்றன எப்படிப்பட்ட முக மூடியை அவை அணிந்துகொண்டுள்ளன யாரால் எப்படிப்பட்டவர்களால் அவை இயக்கப்படுகின்றன அவை எப்படிப்பட்ட நாடகங்களை ஆடுகின்றன அவற்றின் உண்மையான தோற்றம் எப்படிப்பட்டது? இவர்கள் ஏன் அரசியல் ௯த்தாடுகின்றார்கள்? அரசியல் கோமாளி வேடம் போடுகிறார்கள்? எதற்கு வித்தைக்காரராகிறார்கள்? என்று அவர்களது உண்மை உருவத்தை கோடிட்டுக் காட்ட அவர்களது போலி ஆடைகளை/வேடங்களை களைந்து அவர்களை அம்மணமாக உங்கள் முன் நிறுத்தவேண்டிய சமூகக் கடப்பாடு எமது கைகளுக்கு வந்து சேர்ந்திருக்கிறது! அல்லது நாம் கைப்பற்றியிருக்கிறோம் என்று சொல்வது ௯ட பொருத்தமாக இருக்கும்!

இந்த நிலையில் நாம் ஒவ்வொரு கட்சிகளின் மீதும் வைக்கப்போகும் கேள்விகளுக்கும் அவர்கள் மீது வைக்கப்போகும் விமர்சனங்களுக்கும் அவர்களது கடமைகள் என்று பட்டியலிடப்போகும் விடயங்களுக்கும் சம்மந்தப்பட்டவர்கள் ஆத்மார்த்தமான பதிலையோ ஆக்க பூர்வமான நடவடிக்கைகளையோ எடுக்கவேண்டும் என நாம் விரும்புகிறோம்! இந்த விருப்பம் எமது சிற்றின்ப வேட்கையோ அல்லது பெருமை தேடும் படலமோ இல்லை! அதற்கு நாங்கள் அரசியல் வித்தைக்காரர்களும் இல்லை! இந்த வினாக்களும் விமர்சனங்களும் மக்களிடம் உண்மைகளைக் கொண்டுபோய் சேர்ப்பதற்காகவும் உங்களிடம் உள்ள போலியான நிலைப்பாடுகளை சுட்டிக்காட்டவும் நீங்கள் கடந்துவந்த பாதைகளில் இருந்த நேர்மையானதும் போலியனதுமான பக்கங்களை கோடிட்டுக்காட்டவுமே இந்த அறிக்கையை முன்வைக்கிறோம்தமிழகத்தில் ஆரம்பத்தில் புரட்சிகரமாக காங்கிரஸ் என்கிற எதேச்சதிகார கும்பலின் பிடியில் இருந்து வெளியேறி பேரறிஞர்அண்ணா அவர்களால் திராவிட முன்னேற்றக்கழகம் உருவாக்கப்பட்டு பெரு வளர்ச்சியும் வெற்றியும் கண்டது. மத்தியில் ௯ட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்துடன் புறப்பட்ட இந்த பலம் பொருந்திய அணி அண்ணாவின் மறைவோடு -ஒரு மனிதத்தின் எடுத்துக்காட்டின் வீழ்ச்சியோடு- கலைஞர் அய்யாவின் சட்டைப்பைக்குள் வந்து விழுந்து- கோபாலபுரத்துக்குள் குடியேறத்தொடங்கி- குறுகிக்கொண்டது!
குழந்தைக்கு தந்தை நான் ஆனால் தாய்க்கு நான் கணவனல்ல என்று தமிழர் பண்பாட்டையே கேலிக் ௯த்தாக்கிய கலைஞர் அய்யாவை அன்றே தமிழ் தேசத்தில் இருந்து தமிழினம் வெளியேற்றத்தவறியதுதான்.... முள்ளிவாய்க்கால் மனிதப்பேரழிவு வரை தமிழினத்தை இட்டுச்சென்றதும்- இன்றும் தனது பசப்பு வார்த்தைகளை நம்பி அவர் தமிழர்களை ஏமாற்றத் துணிந்து நிற்பதற்கும் காரணம். வாய்ப்பேச்சில் எதிரிகளை வீழ்த்தி சந்தர்ப்பவாதத்தால் தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்து வந்திருப்பதை கலைஞரது ஒவ்வொரு சின்னஞ்சிறு அசைவுகளிலும் கண்டறியலாம்/ மக்கள் பணத்தில் வரியைப்பெறும் அரசாங்கம் மக்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அதன் பணி. ஆனால் ஏதோ தன்னுடைய சொந்தப்பணத்தை போட்டு மக்களுக்கு உதவி செய்வதாக பந்தா காட்டி இலவசங்களையும் சலுகைகளையும் லஞ்சத்தையும் நம்பி அரசியல் செய்தவரும் அதன் முன்னோடியும் கலைஞர் அவர்களே!திருக்குவளையில் இருந்து தூக்குப் பையோடு சென்னைக்கு வந்தார் கலைஞர் அவர்கள் இன்று அவரது சொத்து மதிப்பு என்ன? ஆசியாவின் முதல் பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றது எப்படி?இது யாருடைய பணம்? கண்டிப்பாக இது நம் பணமே! லஞ்சமாகவும், சட்ட விரோதமாகவும், மக்கள் பணிகளுக்கென ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளில் ''சுட்ட'' பணமுமே கலைஞர் அய்யாவை இவ்வளவு சொத்துக்கு அதிபதியாக்கியுள்ளது! அவரது அவ்வளவு சொத்துக்களையும் மதிப்பீடு செய்தால் வரும் பணம் தமிழ் நாட்டை ஏழைகள் இல்லாத மாநிலமாக மாற்ற போதுமான தொகை வருகிறது! அப்படியானால் ஒரு நேர்மையான தலைவரிடம் தமிழகம் சென்றிருந்தால் இன்று தமிழ் நாடு ஏழைகள் இல்லா மாநிலமாக மாறியிருக்குமா இல்லையா?கலைஞர் அவர்கள் தமிழில் பேசுவதில் எதிரிகளை மடக்குவதில் வல்லவர்தான் ஆனால் அது தலைவருக்குரிய தகுதியல்ல அவர் ஒரு விகடகவியாகவே இருக்க அந்த தகுதி போதுமானதாகிறது! அப்படியானால் நீங்கள் ஒரு விகடகவியையே தலைவானாக்கி வைத்திருந்திருக்கிரீர்கள்! அவரை விகடகவி என்று நான் சொல்வதற்கு காரணம் வாய்ப்பேச்சில் மட்டுமன்றி அவர் யாரது கழுத்தையும் வெட்டி தான் பதவியை தக்கவைக்க முடியுமென்றால் அல்லது தன் குடும்பத்தை வளப்படுத்த முடியுமென்றால் தன்னுடன் ௯ட இருப்பவர்களின் கழுத்தையே அறுப்பார் /இதற்கு சான்று தா.கிருட்டிணன் படுகொலை
தனக்கு தேவைப் பட்டால் பெரியாரையும் பகுத்தறிவையும்கையிலெடுத்துக் கொள்ளும் இவர் காவிகளின் கரம்பற்றி பாராளுமன்றத்துல் பவனிவருவார்!தன் மக்களை தில்லி மந்திரிகளாக்க இந்தியும் படிக்க வைப்பார்! மகனை அனுப்பி இந்தியை தார் பூசி அழிக்கசெய்வார்! நீங்களும் தமிழ் வாழ்க/இந்தி ஒழிக என்பீர்கள்!ஊழலில் மாட்டிக்கொள்ளும் போது அய்யகோ பார்ப்பனிய ஊடகங்கள் தமிழினத்தை அழிக்கப் பார்க்கிறது என்பார்! அவரைப் பொறுத்தவரை தமிழினம் என்பது ''அவர் குடும்பம்'' மட்டுமே! உண்மையில் அவர் தமிழினம் கோடியில் புரள்கிறது/தமிழனுக்கு இடரென்றால் கடிதம்? குடும்ப ''விவகாரம்'' என்றால் விமானம் ஏறி தில்லி செல்வது!!ஏன் இந்த ஏமாற்று வேலை?
 ஈழத்தில் எம் உறவுகள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டபோது இரண்டு மணிநேர உண்ணாநோன்பு நாடகம் நடத்திய கலைஞர் அடுத்தநாளே மீண்டும் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி வந்தபோது மீண்டும் உண்ணா நோன்பு இருக்காமல் விட்டது ஏன்? தனது மகளுக்காக டெல்லிவாசலில் தவமிருந்த கலைஞர் ஈழப்பிரச்சனைக்காக ஒரு முறையேனும் டெல்லிக்கு செல்லாதது ஏன்? [இவை பற்றி மேலும் தெளிவாக வைகோ, சீமான் போன்றவர்கள் அவரது போலி முக மூடியை நன்றாகவே கிழித்துள்ளனர் அவற்றையும் கேளுங்கள் உங்களுக்கு நன்றாக விளங்கும்]இப்போது ஈழமக்கள் இறந்து மண்டையோடு இத்துப்போகும் வேளையில் டெசோ என்ற சொல்லை கையில் எடுத்திருப்பது மீண்டும் ஆட்சியை பிடித்து தமிழக மக்களை சுரண்டி மேலும் தன குடும்பத்துக்கு சொத்து சேர்க்கவே தவிர உண்மையான ஈழ மக்கள் மீதான எந்த அக்கறையோ அனுதாபமோ அல்ல!
அடுத்து எம்ஜிஆர் அவர்களது முயற்சியால் அவர் பின்னே திரண்ட உண்மைத்தொண்டர்களின் உழைப்பில் அதிமுக என்ற கட்சி மலர்ந்தது! அவருடைய ஆட்சிக்காலத்தில் நம் ஈழப் போராளிகள் தமிழகத்தின் செல்லப் பிள்ளைகளாகவே வலம் வந்தனர்/ அவருடைய ஆட்சிக் காலத்தில் திமுக எனும் கட்சி எழவேமுடியவில்லை! எம்ஜிஆர் என்ற ஒரு மனிதனின் மறைவுக்குப்பின் ஜெயலலிதா எனும் அம்மையாரின் கைகளுக்கு வந்த அதிமுக என்ற கட்சி அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக பலமுறை பந்தாடப்பட்டுள்ளது! திராவிடர் கழகத்தின் முதன்மை எதிரியான் பார்ப்பனனிடம் ஒப்படைக்கப் பட்டது! கட்சியின் ஏகபோக உரிமையை குத்தகைக்கு எடுத்ததன் விளைவு பல ஆயிரம் தொண்டர்களின் பதவி பறிக்கப்பட்டது! பெரியார் உருவாக்கிய பகுத்தறிவுப் பாசறையில் மஹாமகம் நடத்தப் பட்டது, கரசேவைக்கு கரம் கொடுக்கப் பட்டது, மத வாத சக்திகள் வளர்த்து விடப் பட்டனர், மாற்று மதத்தினர் அச்சுறுத்தப் பட்டனர், பண்டைய இந்துத்துவ கொள்கைகள் நடைமுறைப் படுத்த்ப் பட்டன, பாரதீய ஜனதாவின் கொள்கை துணைக்கட்சி போன்றே அதிமுக மாற்றப் பட்டது! கலைஞருக்குப் போட்டியாக சொத்தைக்குவிப்பதில் எந்த குறைச்சலும் இல்லாமல் வகை தொகையாக வாங்கிக் குவித்தபோதும் கலைஞர் அய்யாவை எட்டிக்௯ட பிடிக்க முடியவில்லை என்பது அம்மையாருக்கு வருத்தமான செய்திதான்!
ஆனால் இங்கு ஒரு விடயத்தை கவனித்தீர்களானால் புரியும் நீங்கள் மாறி மாறி ஆட்சியில் இருத்திய இவர்கள் இருவரும் தமக்கு சொத்து சேர்ப்பதை மட்டுமே சரிவர செய்துள்ளனரே தவிர மக்களுக்காக என்ன உருப்படியாக செய்தார்கள்? காவிரிப்பிரச்சினை, முல்லைப்பெரியாறு என்று மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் எதிலாவது இவர்கள் ஒழுங்கான ஒரு முடிவை எடுத்துள்ளார்களா? ஆனாலும் அவர்களே மாறி மாறி ஆட்சியை பிடிப்பதன் மர்மம் என்ன? மக்களுக்காக வாழ்ந்த அறிஞர் அண்ணாவை தங்கள் போஸ்டர்களில் மட்டுமே இவர்கள் வைத்துள்ளார்கள். ஜெயலலிதா அம்மையாரை தமிழக முதல்வராகவோ அல்லது கட்சித்தலைவியாகவோ ஏற்றுக் கொண்டமைக்கும் குஸ்புவுக்கு கோவில் கட்டியதற்கும் அசினுக்கு பாலாபிசேகம் செய்ததற்கும் எந்த விதமான வித்தியாசமும் அடிப்படையில் இல்லை! இப்போ இதற்கும் கலைஞர் அய்யாவும் ஜெய அம்மாவும் அது அவர்களுக்கே கொடுக்கவென சேர்த்த சொத்து அவர்களிடம் சேர்க்குமுன் சிபிஐ தவறாகப் பிடித்துவிட்டது என்று அறிக்கை விட்டாலோ அதை மக்களாகிய நீங்கள் நம்பினாலோ ஆச்சரியப்பட எதுவும் இல்லை!இதே ஏமாற்றல்/ ஏமாறல் தானே தொடர்ந்து வந்துள்ளது? எனவே மக்களாகிய நீங்கள் இந்த இருகட்சிகளையும் விட்டு முதலில் நீங்கள் வெளியே வாருங்கள்! யார் இவர்கள்? நீங்கள் இந்த உலகில் எதற்க்காக பிறந்தீர்கள்? தலைவனுக்கும் தொண்டனுக்கும் துதிபாடிப்பிழைக்க அல்லது தனியே துதிபாட என்ன சாபக்கேடு உங்களுக்கு? இவர்களுக்கு வாக்களித்து நீங்கள் உங்களுக்கும் உங்கள் சந்ததிக்குமாக பெற்றுக்கொண்டது என்ன? சில ஆயிரங்களுக்குள் உங்களை விலைபேசி உங்கள் வாக்குரிமையை விலைக்கு வாங்கும் இவர்களா உங்கள் தலைவர்கள்? இவர்களா உங்களுக்கு நன்மை செய்பவர்கள்?மாறி மாறி வந்த இரண்டு திராவிடக்கட்சிகளும் முன்பு இருந்த காங்கிரஸ் கட்சியை விட என்ன சாதித்துவிட்டார்கள்? சுயமரியாதை சுயமரியாதை என்று பேசி உங்கள் சுயத்தை வீரம்மிக்க பண்பாடுமிக்க தமிழனதும் தமிழ் மண்ணினதும் சுயத்தை டெல்லியில் அடகு வைத்ததைத் தவிர வேறு என்ன கிழித்திருக்கிறார்கள்? வெள்ளையனிடம் ஒட்டுமொத்தமாக சேர்ந்து போராடி பெற்ற சுதந்திரத்தை தாம் சுவீகரித்துக்கொண்டு உங்கள் உணர்வுகளுக்கோ உரிமைகளுக்கோ எந்தவொரு மதிப்போ மரியாதையோ தராது போவதற்கா அன்று வெள்ளையனிடம் எங்கள் மூதாதையர் நெஞ்சு நிமிர்த்திப்போராடினர்?
வீரம்மிக்க எம் தமிழ் இனத்தை பயன்படுத்திக்கொண்டு இன்று எங்கள் கச்சதீவை எமது அனுமதியின்றி சிங்களவனிடம் தாரை வார்த்ததும், தங்கள் மொழியை எம்மீது திணித்ததும், அதனால் எம் உறவுகள் இறந்ததும், முள்ளி வாய்க்காலில் எம் உறவுகள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட நாங்கள் துடித்தெழுந்து போராடிய போராட்டம் உட்பட எமது உணர்வுகளுக்கு தந்த மதிப்பு இதுதானா? இவை கடந்து போனவையாகவே இருந்து போகட்டும் இன்று ௯டங்குளம் மண்ணின் மைந்தர்களான எம் உறவுகள் தமது உரிமையை/எதிர்காலத்தை இழந்து நிற்கின்றனரே இதுதான் சுதந்திரமா? எங்கள் காணிக்குள் ஒருபிடி மண்ணை தவறாக வைத்து வேலி போட்டால் சண்டைக்குப்போகும் அந்த மக்களின் வாழிடமே கேள்விக்குள்ளகியுள்ளதே இதுதான் சுதந்திரம் பெற போராடியதன் பரிசா? இதுதான் சேர்ந்திருப்போம் என்பதினதும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதினதும் நன்கொடையா? இணைந்திருப்போம் என்று சொல்லிக்கொண்டு ஒருபகுதியினர் வாழவும் ஒருபகுதியினர் வஞ்சிக்கப்படவும் ஆள்வதுதான் சேர்ந்திருத்தலா? எதற்கு மத்திய ஆட்சியாளர்கள் இவ்வாறு எங்களை மட்டும் ஏமாற்ற வேண்டும்? நாங்கள் எதற்கு ஏமாற வேண்டும்? இதுபற்றி நாம் எவ்வளவு தூரம் சிந்திக்கத்தலைப்படுகிறோம்?வெள்ளையர்களை விரட்டி சுதந்திரம் பெற்றதன் விளைவுதான் என்ன? உங்கள் மனச்சாட்சியைத்தொட்டுச்சொல்லுங்கள் இவர்களை விட வெள்ளையன் நல்லவனல்லவா? எமக்கு அவன் ஏன் அணை கட்டவேண்டும்? புகையிரதம் எதற்க்குத்தரவேண்டும்? பெருந்தெருக்களை எதற்கு அறிமுகம் செய்யவேண்டும்? இப்படி ஏராளம் சொல்லலாம்.....ஆனால் அவை இல்லாமல் அவனால் இங்குள்ள வளங்களை அபகரிக்க முடியாதா? முடியும்! ஆனால் அவனிடம் கொஞ்சமாவது ஈரம் இருந்தது! ஆனால் அவனிடம் இருந்து போராடி இந்தப்பரந்த நிலப்பரப்பை மீட்க உயிர் கொடுத்துப்போராடியதற்க்கு தந்த பரிசு இந்தித்திணிப்பு! என்னே ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்? இதைத்தான் வளர்த்த கடா மார்பில் பாய்வது என்பது! இப்படி ஆயிரம் உதாரணங்களை சொல்லலாம்!
எம் அன்புக்கினிய மக்களே! நாம் கற்றுக்கொண்ட பாடங்களிலும் நமக்குப் புகட்டப்பட்ட பாடங்களிலும் இருந்து நாம் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம்! அதற்க்கு முன்னர் ஏனைய கட்சிகளில் உள்ள எம் உறவுகளுக்கும் தலைவர்களுக்கும் ஒரு வேண்டுகோள்!எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய மதிமுக பொதுச்செயலர் திரு வைகோ அய்யா அவர்களே, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு தொல். திருமாவளவன் அவர்களே,பெரியார் திக கொளத்தூர் மணி அண்ணா அவர்களே, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களே, தமிழ் தேசப்பொதுவுடமைக்கட்சி தோழர் பெ மணியரசன் அவர்களே.நாம் தமிழர் கட்சி சீமான் அவர்க்ளே...கம்யூனிச தோழர்களே..இன்னும் முக ஏடு டுவிட்டர், ௯கிள்+ போன்ற சமூக வலைத்தளங்களில் பயணிக்கும் அறிவார்ந்த தமிழ் சமூக இளைஞர்களே! தமிழர்களே உங்கள் அனைவருக்கும் நாம் அன்போடும் உரிமையோடும் சில விடயங்களை பகிர்ந்து கொள்கிறோம்!இன்று ஒருவரை ஒருவர் சாடியும் அவரைக்கேட்டால் இவரைக்கேள் என்றும் இவரைக்கேட்டால் அவரைக்கேள் என்றும் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி ஆட்சிசெய்யும் இரண்டு கட்சிகள் தம்மளவில் பெரிய கட்சிகள் என்ற காரணத்தினால் உங்களது அரிய கொள்கைகளையும் அதிசிறந்த அரசியல் அபிலாசைகளையும் விழுங்கி ஏப்பம் விட்டு உங்களை தமது தேவைகளுக்கு வண்டியிழுக்கும் குதிரைகளாக பாவித்துகொண்டிருக்கின்றன!இதோ இன்று ஈழத்து படுகொலையைக் கண்டித்து நடைபெறும் நினவஞ்சலிப் பொதுக் கூட்டத்தினைக் கூட ஒன்றுபட்டு நடத்த முடியாத படி தமிழினம் எதிரிகளால் பிரிக்கப் பட்ட பேரவலம் நிகழ்கிறது ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு நாள் நிகழ்த்துகிறீர்கள்..இதனை ஈழத்து ஈகியரின் ஆன்மாவே ஏற்றுக்கொள்ளாது....
இந்த பேரவலம் அவர்களை பணக்காரர்களாகவும் தமிழகத்தை ஏழை மாநிலமாகவும் மட்டுமே ஆக்கியுள்ளது! இந்த பேரவலத்தில் இருந்து நாம் விடுபட்டு ஆகவேண்டும்! எமது பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய திரு பழ நெடுமாறன் அவர்களே தமிழருவி மணியன் அய்யா அவர்களே நீங்களும் உங்களைப்போன்ற நேர்மையான அரசியலையும் அரசியல் மாற்றத்தையும் விரும்பிநிர்க்கும் ஏனைய தமிழுனர்வுமிக்க செயற்பாட்டாளர்களையும் இணைத்து ஏனைய நாம் மேலே குறிப்பிட்டுள்ள கட்சிகளையும் இயக்கங்களையும் இணைத்து ஒரு வலுவான அரசியல் ௯ட்டணியை சுய விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் முன்மொழிய வேண்டியதும் அவர்களை ஒருங்கிணைத்து ஒரு அரசியல் மாற்றத்தைக்காண ஒரு முன்னேற்ப்பாடு செய்யவேண்டிய கடப்பாடு தமிழர் ஆன்றோர் அறிஞர் தலைவர்களாகிய உங்களிடம் தார்மீகமாக வந்துசேர்ந்திருக்கிறது என்பதை வலியுறுத்தவும் இந்த சந்தர்ப்பத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! இதற்காக அனைத்துக்கட்சிப்பிரதிநிதிகளை அழைத்து நீங்கள் உருவாக்கியுள்ள செயல்திட்டத்தை அவர்களிடம் முன்மொழியவேண்டும்! இதற்காக ''ஏனைய அனைத்து இயக்க'' செயர்ப்பாட்டாளர்களையும் அழைக்கவேண்டும்! அவர்கள் எல்லோரிடமும் தமிழர் ஒற்றுமைக்காகவும் தமிழ் நாட்டின் மேன்மைக்காகவும் தமிழினத்தின் ஆன்ம விடுதலைக்காவும் ஒன்றுபடும் அவசியத்தை வலியுறுத்தி அவர்களை ஒன்றிணைக்கும் பணியினை நீங்கள் திறம்பட மேற்கொள்ள வேண்டும் என்றும் நாம் அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்! தற்போது திராவிடம் என்பது தமிழனை பிரிக்கும் தந்திரத்தின் வடிவம் என முழங்கிவரும் ஒருசாராரை நாம் மிகவும் பணிவோடு கேட்டுக்கொள்வது என்னவெனில் திராவிடம் என்பதை கட்சி பெயரில் கொண்டவர்கள் எல்லோரையும் ஒரே தட்டில் வைத்துப்பார்க்க வேண்டாம் என்றும் திராவிடம் என்பதை கட்சிப்பெயரில் கொண்டுள்ள இரண்டு பெரும் கட்சிகளுமே தமிழர்களை விழுங்கி ஏப்பம் விட்டுள்ளன என்பதோடு நீங்கள் சொல்வதுபோல ஏனைய கட்சிகளும் அவ்வாறே இருந்தால் இப்போது நாம் முன்மொழிந்துள்ள இந்தக் ௯ட்டணி வரைபு எல்லோருக்கும் ஒரு பாடமாக அமையும்! அவர்கள் தம்மிடம் உள்ள தமிழின விரோதக்கொள்கைகளை அடியோடு கைவிடவோ அல்லது அவர்கள் அரசியல் அரங்கில் இருந்து அடியோடு வேரறுக்கப்படவோ இதுவே தகுந்த வழி என்பதோடு நாம் நண்பர்களையும் சகோதரர்களையும் அயலவர்களையும் எதிரிகளையும் ஒட்டுமொத்த கணிப்பில் இருந்து பெற்றுக்கொள்வது நாகரீக அணுகுமுறையா என்பது நன்கு சிந்திக்கவேண்டிய விடயம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்!
 எனவே இந்த அரிய சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அரசியல் சமூக மாற்றத்தை ஏற்ப்படுத்த உறுதி எடுத்துக்கொள்வதே இன்றைய நாளில் நாம் முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் சிங்கள பேரகங்காரவாதத்தால் கொல்லப்பட்ட எம் தமிழ் சொந்தங்களுக்காகவும் இந்திய ஏகாதிபத்தியத்தின் அரூபக் கரங்களால் அழிக்கப்பட்ட தமிழீழ அரசிற்கும் நாம் செய்யும் உண்மையான அஞ்சலியும் வணக்கமும் ஆகும்! எனவே அனைவரும் ஒன்றிணைவோம் உறுதியெடுப்போம் தமிழன் தலைவிதியை மதியால் வெல்வோம்!
-நன்றி-
-தமிழ் சோறு முக ஏட்டுக்குழுமம்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக